×

கேமத்ரும தோஷம் யோகம்?

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

இவ்வுலகில் மனமே எல்லாவற்றையும் தீர்மானம் செய்கிறது. வாழ்க்கை வாழ்வதற்கு பணம் தேவை உண்மைதான். பணம் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று நம்புகிறவர்கள் பலர்.

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு – குறள்

இது வள்ளுவன் வாக்கு. பொருள் இல்லாதவனுக்கு இவ்வுலகம் இல்லை என்பதை இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே, தன் அனுபவத்தை குறள் வடிவாக எழுதி இருக்கிறார். பொருள் என்பது காலத்திற்கு காலம் மாறினாலும், வடிவம் மாறினாலும், பொருள் என சொல்லக்கூடிய செல்வத்தினை தேடும் பொருட்டு எல்லோரும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். பொருள் ஒருவனின் தேவையை பூர்த்தி செய்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நிலையை வைத்தே பொருள் ஈட்டும் தன்மை புலப்படும். ஆகவே, சந்திரனை வைத்தே பலருக்கு பலன் சொல்லப்படுகிறது.

சந்திரன்தான் மனத்திற்கு அதிபதி ஆகிறான். உங்கள் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் சிறப்பாக இல்லாவிடில், நம்மை சுற்றி எல்லாம் இருந்தாலும், ஒருவனுக்கு ஏதும் இல்லை என்ற மனப்பாங்கு இருந்து கொண்டே இருக்கும். அவன் மனம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டே இருக்கும். சந்திரன் அசுப கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் போது, இவர்களுக்கு தெரியும் சில விஷயங்கள் மற்றவர்களுக்கு தெரிவதில்லை. அந்த நேரத்தில், இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுதான் பலர் சொல்வார்கள். அப்படி சந்திரன் பல மாயங்களை செய்வதில் வல்லவன். அறிவியலும் மானுடமும் கண்ணில் காண்பதையே நம்பும்.

காணாததை நம்பாது. அது அறிவியல் இல்லை என்று ஒதுக்கிவிடும். ஒவ்வொருவருக்கும் உள்ள சுய அனுபவங்கள் மட்டுமே ஒரு விஷயம் உண்மை என்ற விஷயத்திற்கு உட்படும். இந்த மனம் ஒரு புரியாத புதிர். சில நேரங்களில் இது வேண்டும் என்று எதிர்பார்க்கும். சில நேரங்களில் இது வேண்டாம் என்று நினைக்கும். சந்திரனின் வேகம் அதிகம். நினைத்த மாத்திரத்தில் ஓரிடத்திற்கு வியாபிக்கும் திறன் மனதிற்கு மட்டுமே உண்டு. சந்திரனை அடிப்படையாகக் கொண்டு பல யோகங்கள், தோஷங்கள் ஜோதிடத்தில் பல சொல்லப்பட்டாலும், அவற்றில் ஒரு தோஷம்தான் இந்த கேமத்ரும தோஷம். அதனை பற்றி தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவரும் தங்களின் சுய ஜாதகத்தில் தாங்களே பார்த்துக் கொள்ளும் வழி வகை உண்டு.

கேமத்ரும தோஷம் என்றால் என்ன?

யோகம் என்பது நேர்மறை ஆற்றலை பெற்றுக் கொள்வது. தோஷம் என்பது எதிர்மறை ஆற்றலை பெற்றுக் கொள்வதாகும். இந்த கேமத்ரும என்பது எதிர்மறையாக ஒரு நபருக்கு செயல்படும் என்பதால் இதனை தோஷம் என்றுதான் சொல்ல வேண்டும். ஜோதிடத்தில் எல்லா விதிகளுக்குள்ளும் விதி விலக்குகள் உண்டு. எல்லா விதி விலக்குகளுக்கு உள்ளே சில விதிகளும் உண்டு என்பதால், ஜோதிடம் என்ற கலையை புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி எங்கே எந்த விதியை கொண்டு வர வேண்டும், கொண்டு வரக்கூடாது என்பதும் அனுபவம் மட்டுமே ஞானம் அருளும்.

ஒரு ஜாதகரின் பிறப்பு ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்பும் சந்திரனுக்கு பின்னும் கிரகங்கள் இல்லாமலும் சந்திரனுக்கு கேந்திரங்கள் எனச் சொல்லக்கூடிய 1,4,7,10 பாவங்களில் கிரகங்கள் இல்லாமலும் சந்திரனுக்கு திரிகோணத்தில் 1,5,9 ஆகிய பாவங்களிலும் கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும், சந்திரன் தனித்து இருந்தாலும் அந்த ஜாதகருக்கு கேமத்ரும தோஷம் உள்ளது என்று பொருள்.

இப்படி ஒரு தோஷம் ஒரு ஜாதகருக்கு ஏற்படுவது அபூர்வம் ஆகும். ஏனெனில் கிரகங்கள் கூட்டாக ஓரிடத்தில் இருந்தால்தான் இப்படிப்பட்ட தோஷம் உருவாகும் என்பதை புரிந்து கொள்ளலாம். கேமம் என்றால் ஏதும் இல்லாத என்று பொருள். த்ரும என்பதற்கு முன்பின் என்று பொருள். அதாவது, சந்திரனுக்கு முன்பின் என்று பொருள்படுவதால் இந்த தோஷத்திற்கு கேமத்ரும தோஷம் என அழைக்கப்படுகிறது.

கேமத்ரும ஏன் தோஷம்?

சந்திரனின் வியாபகம்தான் எல்லாவற்றையும் ஒருவருக்கு தருகிறது. பொதுவாக சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆவார். அவர்தான் பூமிக்குள் உயிர்களை கொண்டுவரும் காரணகர்த்தாவாகிறார். தாய் என்ற சொல்லுக்கு ஜோதிடத்தில் காரகம் சந்திரன்தான். ஒரு பெண் குழந்தை பிறந்த பின்பே தாய் என்ற ஸ்தானத்தை பெறுகிறாள். சந்திரன் என்ற மனம்தான் பொருள் ஈட்டும் வழியையும் மனநிலையையும் ஒருவருக்கு தருகிறார்.

இந்த மனம் என்று சொல்லக்கூடிய சந்திரன் தனித்து இருந்தால் எல்லாவற்றிலும் இருந்தும் தனித்தே இருப்பார். ஆகவே, பொருள் ஈட்டும் நிலையை நோக்கி செல்ல மாட்டார் அல்லது பொருள் ஈட்டினாலும் அதை, தான தர்மம் செய்து விடுவார். அவரிடம் ஏதும் இருக்காது. ஆதலால், அவரை யாரும் பின் தொடர மாட்டார்கள். இந்தவிதமான கிரகம் மற்றும் கிரகநிலை சந்நியாசிகளுக்குதான் ஏற்படும். அவர்களே செல்வத்தை வைத்துக் கொள்ளவும் மாட்டார்கள். செல்வத்திற்காக எதையும் தேடவும் மாட்டார்கள்.

வாழ்வில் அனைத்தும் தேவை என்றிருப்பவர்களுக்கு தோஷமாகவும், சந்நியாசம்தான் வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு கேமத்ரும யோகமாகவும் செயல்படும் என்பதே உண்மை. சந்திரன் என்ற மனோகாரகனே ஒருவனுக்கு குபேர சம்பத்தை பெற்றுத் தருகிறான். அப்படிப்பட்ட சந்திரன் பாதிக்கப்படும் பொழுது பொருள் வரும் வழிகளும் பாதிக்கப்படும் அல்லது தடைபடும்.

கேமத்ரும தோஷத்திற்கு பரிகாரம்

இதற்கான பரிகாரத்தை வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டும் என்பதாகும்.

* திங்கட் கிழமை என சொல்லக்கூடிய சோம வாரத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது.

* பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது நன்மைதரும். இல்லாவிடில் வீட்டின் மாடியில் சந்திரனுக்கு மாலை நேரத்தில் அவல் பாயசம் படைத்து பூஜை செய்ய வேண்டும்.

* வருடத்திற்கு ஒரு முறை கங்கா, காவேரி, பவானி போன்ற நதிகளில் நீராடி வருவது நல்ல பலன்களைத் தரும்.

* ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை தரிசனம் செய்வது சிறந்த நற்பலன்களையும் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் கொடுக்கும்.

* உணவுப் பொருட்களை வீண் செய்தல் கூடாது.

* அருவியில் உள்ள நீரை பாட்டிலில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்விப்பது நன்மைதரும். அதே போல், மழைநீரையும் சேமித்து அதில் பன்னீர் கலந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வதும் நல்லதாகும்.

* வெண்மையான ஆடைகளை அதிகம் உடுத்திக்கொள்வது இன்னும் சிறப்பு.

* கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்களிடம் ஆசீர்வாதம் பெறுவது இன்னும் சிறப்பாகும்.

The post கேமத்ரும தோஷம் யோகம்? appeared first on Dinakaran.

Tags : Sivakanesan ,
× RELATED சாயா நாடி 2